அர்ணா புயல் ஆந்திரா – ஏனாம் கடற்கரை இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுச்சேரி, அக்டோபர் 27: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அர்ணா புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இது வரும் 28ஆம் தேதி முற்பகலில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து அர்ணா புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து ஆந்திரா கிழக்கே 910 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 26ஆம் தேதி நல்லிரவுக்குள் மேற்கு மத்திய வங்கக்கடலில் தீவிர புயலாகவும், 27ஆம் தேதி அதே பகுதியில் மிக தீவிர புயலாகவும் வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 28ஆம் தேதி புதன்கிழமை ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளை கடக்கும்போது மிக தீவிர புயலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வரையிலும், அவ்வப்போது 140 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அர்ணா புயல் எதிரொலியாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.