புதுச்சேரியில் போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்த வங்கதேச வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்த 25 வயதான சுமோன் உசைன், கடந்த ஒன்றரை மாதமாக கடையின் மாடியில் உள்ள அறையில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி மதியம் உணவு சாப்பிடுவதற்காக மாடிக்கு சென்ற அவர், ஏசி அவுட்டோர் யூனிட்டை பிடித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே வராததால் கடை உரிமையாளர் மாடிக்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது அவர் வேலைக்கு சேரும்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவன் என போலி ஆதார் அட்டை வழங்கியிருந்தது தெரியவந்தது. அவரது ஆதார அட்டையில் இருந்த தொடர்பு எண்களை வைத்து விசாரித்தபோது, அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி சென்னையில் சில மாதங்கள் வேலை செய்து வந்ததும் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பயன்படுத்திய ஆதார அட்டை போலியானது என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனை அடுத்து புதுச்சேரி போலீசார் சார்பில் வங்கதேச ஹை கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆதார் அட்டையை வங்கதேசத்தை சேர்ந்தவருக்கு தயாரித்து கொடுத்தது யார் மற்றும் புதுச்சேரியில் இதுபோன்று வேறு வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா என்பது குறித்து மத்திய உளவுப்பிரிவு மற்றும் புதுச்சேரி உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கதேச ஹை கமிஷன் அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து விசாரணை நடத்திய பின்னரே உயிர் இழந்தவரின் உண்மையான பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.