காமராஜ் நகர் கிருஷ்ணா நகரில் மழைநீரை வெளியேற்ற முயன்றபோது வாக்குவாதம்
புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி கிருஷ்ணாநகர் 12-வது குறுக்கு தெரு விரிவாக்கப் பகுதியில் மழைநீரை வெளியேற்றச் சென்ற ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பெய்துவரும் தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள தாழ்வான வீடுகளைச் சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கக் கோரிக்கை விடுத்தும் அரசியல் அழுத்தம் காரணமாக சாலை அமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மற்ற பகுதிகள் உயரமாகியுள்ள நிலையில், இந்த விரிவாக்கம் மட்டும் பள்ளமான பகுதியாக மாறி வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற வந்த உழவர்கரை நகராட்சி ஊழியர்களைத் தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மழைக்கும் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றுவதற்கு மாற்றாக, இப்பகுதியில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

