அரசின் உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – கல்வித்துறை
புதுச்சேரி, அக்டோபர் 28: அரசின் உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலங்களில் மாணவ மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அவ்வாறு விடுமுறை விடும்போது ஒரு சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடுவதில்லை என பெற்றோர்கள் புதுச்சேரி அரசு கல்வித்துறைக்கு புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் கல்வித்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில் எந்தவிதமான வகுப்புகளையும் நடத்த கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மாணவர்கள் சீருடையிலோ அல்லது வண்ண உடையிலோ பள்ளிக்கு வருமாறு பள்ளிகள் அறிவுறுத்தவோ கட்டாயப்படுத்தவோ கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி வெளியான செய்தியின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளிக் கல்வித் துறையால் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்படும் நாட்களில் பள்ளிகளில் எந்தவிதமான வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


