நிலுவை ஊதியத்தை வழங்காவிட்டால் கல்வித்துறை முன்பு போராட்டம் – தனியார் பள்ளி சங்கம்
புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கல்வித்துறை முன்பு போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில் இயங்கி வரும் 34 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதியிலும் வழங்க வேண்டிய ஊதியத்தை புதுச்சேரி அரசு உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் ஆசிரியர்கள் மனவேதனைக்கு உள்ளாகி வருவதாகவும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பாலா தெரிவித்துள்ளார். பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் எந்த ஊழியர்களும் ஓய்வூதியர்களும் ஊதியம் இல்லாமல் மிகுந்த சிரமப்படுவதால், முதலமைச்சரும் கல்வித்துறை அமைச்சரும் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊதியம் வழங்க அரசு காலம் தாழ்த்துமேயானால் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களை ஒன்றிணைத்து புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தின் உதவியுடன் கல்வித்துறையின் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

