புதுச்சேரியில் குபேர் அங்காடி மீன் கழிவுநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும் என எம்எல்ஏ நேரு உறுதி
புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட தியாக முதலியார் வீதி, ரங்கப்பிள்ளை வீதி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தேங்கும் மழைநீர், சின்ன சுப்பராய பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதிகளில் உள்ள யூ வடிவ கால்வாய்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில், குபேர் அங்காடி மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் மீன் கழிவுகளும் கழுவுநீரும் மழைநீர் வடிகால்களில் கலந்து துர்நாற்றம் வீசி வருவதால், உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதர்ஷ் மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் ஐயாவு ஆகியோருடன் இணைந்து எம்எல்ஏ நேரு அப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்டார்.
முன்னதாக கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் முதல்வராக இருந்த ரங்கசாமி ஆட்சிக்காலத்தில் மீன் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக நிலையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் 2016 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து மீன் கழிவுநீரை சுத்திகரித்து மழைநீர் வடிகால் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை இயக்குநரிடம் அவர் வலியுறுத்தினார். இதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு முதல்வருடன் பேசி பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி புதுச்சேரி பெரிய மார்க்கெட் கால்வாய் பகுதியில் கழிவுநீர் பிரச்சனை மற்றும் மழைநீர் தேங்குவது குறித்து எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

