சென்னையில் நடைபெற்ற உலக பாடி பில்டிங் போட்டியில் பதக்கம் வென்ற புதுச்சேரி வீரர் வசந்த் பிரேம்குமார்
புதுச்சேரி, அக்டோபர் 28: சென்னையில் நடைபெற்ற உலக பாடி பில்டிங் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் பங்கேற்று பதக்கம் வென்ற புதுச்சேரியை சேர்ந்த வசந்த் பிரேம்குமாரை முதலமைச்சர் என்.ரங்கசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்த வசந்த் பிரேம்குமார், உடல் கட்டமைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது கடின உழைப்பால் ஏற்கனவே தமிழ்நாடு பாடி பில்டிங் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற உலக பாடி பில்டிங் போட்டியில் 65 கிலோ எடை பிரிவிற்கான போட்டிகளில் அவர் கலந்து கொண்டு அபார வெற்றி பெற்று பதக்கம் வென்றார். பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த வசந்த் பிரேம்குமார் முதலிடம் பிடித்தது புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளது.
வெற்றி பெற்ற வசந்த் பிரேம்குமாரை அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் உப்பளம் தொகுதி தலைவர் டாக்டர் பி.பாஸ்கர் மற்றும் நண்பர்கள் உடன் சென்று முதலமைச்சர் என்.ரங்கசாமி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், அரசு கொரடா, தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த், முதலமைச்சரின் தனி செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் போது அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அடுத்த வருடத்தில் நடக்கும் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என வசந்த் பிரேம்குமார் தெரிவித்தார்.

