தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 28: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் முறைக்கேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் எஸ்ஐஆர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டப்பேரவை அருகே உள்ள ஆம்பூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேர்தல் ஆணையர் மற்றும் எஸ்ஐஆர் முறைக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் முறைகேடுகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவதாகவும், இந்த முறைகேடுகளுக்கு பின்னணியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். எதிர்காலத்திலும் தேர்தல் முறை நியாயமாக நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

