புதுச்சேரி

புதுச்சேரி இந்திய உணவுக் கழகத்தில் 4,950 தேவையற்ற கோப்புகள் அகற்றம்: 1,500 சதுர அடி இடம் மீட்பு!

புதுச்சேரி, அக். 28: மத்திய அரசின் நிறுவனத் தூய்மை மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதுச்சேரி வாணரப்பேட்டையில் இயங்கி வரும் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) கோட்ட அலுவலகத்தில் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கழிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக அலுவலகத்தில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த பழைய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் பயன்பாட்டில் இல்லாத மற்றும் தேவையற்ற 4,950 கோப்புகள் கண்டறியப்பட்டு, அரசு விதிகளுக்குட்பட்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கழிவுக் கோப்புகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் சுமார் 1,500 சதுர அடி பரப்பளவிலான இடவசதி மீட்கப்படுகிறது. மேலும், இந்த கழிவுப் பொருட்களை ஏலம் மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்புவதன் மூலமாக அரசுக்கு சுமார் ரூ.42 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இத்துடன் அலுவலக வளாகம் மற்றும் தானியக் கிடங்குகளில் முழுமையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை உருவாக்கும் வகையில் சுமார் 55 ஊழியர்கள் பங்கேற்று அலுவலக வளாகத்தில் 15 மரக்கன்றுகளை நட்டனர். மத்திய அரசின் சிறப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் அலுவலக பணிச்சூழலை நவீனப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன