கதிர்காமம் தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று சிறப்புப் பரிசு வழங்கிய எம்.எல்.ஏ. அழகானந்தம்!
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் வகையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு (எ) அழகானந்தம் தொகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று சிறப்புப் பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியின் ஆசியோடும், கதிர்காமம் தொகுதி வாக்காளர்களின் பேராதரவோடும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. எஸ்.எஸ். அழகு அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், தொகுதி மக்களுக்குத் தனது நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் வகையில் தொகுதிக்குட்பட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் அவர் நேரில் களமிறங்கினார்.
அதன்படி, ராம் நகர், மங்களக்ஷ்மி நகர், மாணிக்க செட்டியார் நகர் நெசவாளர் குடியிருப்பு, கொஞ்சுகிளி மாரியம்மன் பிளாட் மற்றும் ரவுண்ட் குவார்ட்டர்ஸ் ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனது தனிப்பட்ட சார்பில் சிறப்புப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்.
தங்கள் பகுதிக்கு நேரில் வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்தும் அன்போடு மரியாதை செலுத்தினர். அப்போது தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், கதிர்காமம் தொகுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மூலம் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். தொகுதி மக்களை நேரில் சந்தித்துப் பரிசுகளைப் பகிர்ந்து கொண்ட இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.