ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது; பட்டையை முறையாகப் பூட்டுங்கள்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதுச்சேரி சீனியர் எஸ்.பி. அறிவுரை!
புதுச்சேரி, அக். 28:
புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், தலைக்கவசம் அணிவது மட்டுமே முழுமையான பாதுகாப்பைத் தந்துவிடாது என்றும், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளின்படி அதன் கழுத்துப் பட்டையை முறையாகப் பூட்டுவது கட்டாயம் என்றும் போக்குவரத்து காவல் துறை சீனியர் எஸ்.பி. திவ்யா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமீபத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்தும், அதன் கழுத்துப் பட்டையை முறையாகப் பூட்டாததால் விபத்தின்போது தலைக்கவசம் கழன்று விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம், தலைக்கவசத்தின் பட்டையை முறையாகப் பூட்டுவதன் அவசியத்தை உணர்த்துகிறது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்போரும் கட்டாயம் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் எப்போதும் ஐஎஸ்ஐ (ISI) முத்திரையிடப்பட்ட தரமான தலைக்கவசத்தையே அணிய வேண்டும். தலைக்கவசம் தலையில் சரியாகப் பொருந்துவதையும், தலையை முழுமையாக மூடிப் பாதுகாப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். பயணத்தைத் தொடங்குவதற்கு முன் தலைக்கவசத்தின் கீழ் உள்ள கழுத்துப் பட்டையை இறுக்கமாகப் பூட்ட வேண்டும். அவ்வாறு பூட்டப்படாத பட்சத்தில், விபத்து ஏற்படும் தருணத்தில் தலைக்கவசம் கழன்று கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த தூரப் பயணமாக இருந்தாலும் சரி, தூரத்தைப் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தை இயக்கும்போதும், பின்னால் அமர்ந்து பயணிக்கும்போதும் தலைக்கவசத்தை முறையாக அணிவது அவசியமாகும். எனவே, தலைக்கவசத்தை முறையாக அணிவதை அன்றாட வழக்கமாக்கிக் கொள்வதுடன், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வாகன ஓட்டிகளையும் இப்பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற பொதுமக்கள் ஊக்கப்படுத்த வேண்டும்” என்று சீனியர் எஸ்.பி. திவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

