முதலியார்பேட்டை ரயில்வே கேட் நிரந்தரமாக மூடல்: ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் வாகன ஓட்டிகள்!
புதுச்சேரி, அக். 28: புதுச்சேரி கடலூர் சாலையில் முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில் மற்றும் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளின் தீவிரம் காரணமாக, முதலியார்பேட்டை ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிரந்தரமாக மூடியுள்ளது. இருப்பினும், விபத்து அபாயத்தை உணராமல் வாகன ஓட்டிகள் கேட்டின் அடியில் இருசக்கர வாகனங்களை சாய்த்து எடுத்துச் சென்று தண்டவாளத்தைக் கடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியிலிருந்து கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மார்க்கமாகச் செல்லும் முக்கிய வழித்தடமான முதலியார்பேட்டையில், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, தெற்கு ரயில்வே மற்றும் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.72 கோடி மதிப்பீட்டில் 630 மீட்டர் நீளத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி – கடலூர் சாலையில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சதுக்கம், 100 அடி சாலை மற்றும் மரப்பாலம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏ.எப்.டி. ஆலை எதிரே மேம்பாலத் தூண்கள் மற்றும் தரைத்தளப் பணிகள் மும்முரமாக நடந்து வருவதால், முதலியார்பேட்டை ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டு, எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதால், அங்கு கேட் கீப்பர் பணியில் இருப்பதில்லை. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படாமல் பல இருசக்கர வாகன ஓட்டிகள் மூடிய கேட்டின் கீழ்ப் பகுதியில் வாகனத்தைச் சாய்த்துத் தள்ளியபடி உயிரைப் பணயம் வைத்துத் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். எந்த நேரத்தில் ரயில் வரும் என்று தெரியாத நிலையில், பெரும் அசம்பாவிதம் நிகழும் முன் காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இரும்புத் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்வதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

