புதுச்சேரி

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பண்டிகை உதவி ரூ.8,000 ஆக உயர்த்துக: புதுச்சேரி முதல்வரிடம் சிஐடியு மனு!

புதுச்சேரி, அக். 28: புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகால உதவித்தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆகியோருக்கு, சிஐடியு புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் நிர்வாகிகள் தினேஷ்குமார், சீனுவாசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விரிவான கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகால உதவித்தொகையை ரூ.8,000 ஆக உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், திருமண உதவித்தொகையை ரூ.30,000 ஆகவும், மகப்பேறு உதவித்தொகையை ரூ.20,000 ஆகவும், பணியிட விபத்து மரண நிவாரணத்தை ரூ.5 லட்சமாகவும், இயற்கை மரண நிவாரணத்தை ரூ.3 லட்சமாகவும், ஈமச்சடங்கு உதவித்தொகையை ரூ.20,000 ஆகவும் உயர்த்த வேண்டும்.

அதேபோல், முழு ஊனமடையும் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தை ரூ.3 லட்சமாகவும், மருத்துவ சிகிச்சை உதவியை அதிகபட்சம் ரூ.30,000 ஆகவும், மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வேலையின்மை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை, உயர்கல்வி நிதியை உயர்த்தி உடனுக்குடன் வழங்கிடவும், தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உறுப்பினர் அட்டை வழங்கி நலத்திட்டங்கள் தடங்கலின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து சிஐடியு நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, உரிய காலக்கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன