புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: 184.9 ஏக்கர் நிலம் கையகப்படுத்த சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு!
புதுச்சேரி, அக். 25:
புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் எளிதாகத் தரையிறங்கும் வகையில் ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய 1,500 மீட்டர் நீளம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதையை, 2,700 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டதாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக புதுச்சேரி பகுதியில் 81.7 ஏக்கர் மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 37 ஏக்கர் என மொத்தம் 184.9 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதலால் குடியிருப்புகள், நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற வசதிகளை உறுதிசெய்யும் பொருட்டு 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் விரிவான சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை (SIA Report) தயாரிக்கப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் கருடிகுப்பம் கிராமத்தில் 17.3 ஏக்கர் தனியார் நிலம், பொதுப்பணித்துறையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான நிலம் உள்ளிட்டவை கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த நில எடுப்பால் கருடிகுப்பம், ஜீவானந்தபுரம், ஸ்ரீராம் நகர், ஓட்டரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 157 குடும்பங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 92 குடும்பங்களின் வாழ்வாதாரமும், 77 குடும்பங்களின் வீடுகளும் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதால், சந்தை மதிப்பிற்கு ஏற்ப சதுர அடிக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், மக்களுக்கு ஒரே மாதிரியான நிவாரணம் வழங்காமல் ஒவ்வொரு குடும்பத்தின் இழப்பையும் தனித்தனியாகக் கணக்கிட்டு மறுவாழ்வுத் திட்டம் தீட்ட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருகிலேயே மாற்று வீட்டுமனைகள், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் வழங்குவதுடன், பட்டா மற்றும் வாரிசுரிமை சிக்கல்களைத் தீர்க்க தனி உதவி மையம் அமைக்கவும், இழப்பீட்டுத் தகவல்களைத் தமிழில் வெளிப்படையாக வழங்கவும் அறிக்கையில் விரிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

