புதுச்சேரி

விதிமீறி 11 மணி நேரம் இயங்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை: கல்வித்துறை இயக்குநரிடம் அதிமுக அன்பழகன் கடிதம்!

புதுச்சேரி: அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி காலை முதல் இரவு வரை சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக வகுப்புகளை நடத்தி மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அன்பழகன் கல்வித்துறை இயக்குநரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநருக்கு அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், கல்வித்துறையின் சட்டத்திட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையின் உத்தரவுகள் மற்றும் அரசாணைகளுக்குக் கட்டுப்படாத கல்வி நிறுவனங்களின் தவறுகளைத் தடுத்து நிறுத்தி, அவற்றை முறைப்படுத்த வேண்டியது துறையின் தலையாய கடமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் புதுச்சேரியில் பெய்த கனமழையின் காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை மதிக்காமல் உப்பளம் தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக இயங்கின. இது குறித்து புகார்கள் எழுந்த பின்னரே கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது என்பதை அன்பழகன் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், கல்வித்துறை விதிகளின்படி காலை 9.15 மணி முதல் மாலை 4.20 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும். ஆனால், உப்பளம் வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகள் காலை 8.00 மணிக்கு முன்பாகவே தொடங்கி, இரவு 7.00 மணி வரை 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகின்றன. குறிப்பாக 15 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் இரவு நேரத்தில் வீடு திரும்புவதில் கடுமையான சிரமங்களையும் பாதுகாப்பற்ற சூழலையும் எதிர்கொள்கின்றனர் என்று அவர் விவரித்துள்ளார்.

தினசரி 11 மணி நேரத்திற்கும் மேலாக வகுப்பறையிலேயே அடைந்து கிடப்பதால் மாணவ, மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, அரசு நிர்ணயித்துள்ள நேரத்திற்கு மாறாக அதிகாலை தொடங்கி இரவு வரை கூடுதல் நேர வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கல்வித்துறை சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்பழகன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன