காரைக்கால்

நிரவி–திருப்பட்டினம் தொகுதி பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண்க: உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தல்

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம், நிரவி–திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் நிலவும் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், உள்ளாட்சித் துறை இயக்குநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறை (LAD) இயக்குநர் திரு. M. ஆதர்ஷ் ஐ.ஏ.எஸ். அவர்களை அவரது அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. TKSM மீனாட்சிசுந்தரம் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, நிரவி மற்றும் திருப்பட்டினம் பகுதிகளில் உள்ளாட்சித் துறை மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியப் பணிகள் மற்றும் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

இச்சந்திப்பின் போது, தொகுதியில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாருதல், சாலை வசதிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் பணிகளை எவ்வித சுணக்கமும் இன்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

நிரவி–திருப்பட்டினம் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிடவும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும் உரிய கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு இயக்குநர் ஆதர்ஷிடம் அவர் எடுத்துரைத்தார். இக்கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்த உள்ளாட்சித் துறை இயக்குநர், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன