புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிப்பறை அருகே நோயாளிகள் படுக்க வைக்கப்பட்ட அவலம்: எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் நேரில் ஆய்வு!
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி வயதான நோயாளிகள் கழிப்பறை அருகே தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவல நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியின் முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள ஆண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இடப்பற்றாக்குறை காரணமாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவர்கள் போதிய படுக்கை வசதி கிடைக்காமல் தரையிலும் கழிப்பறை வாசலிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன், ஆண்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிப்பறை வாசலில் நோயாளிகள் தவித்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் அவர் விரிவான விளக்கம் கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் எளிய மக்களுக்கு தேவையான கூடுதல் படுக்கை வசதிகள், முறையான குடிநீர் மற்றும் சுகாதாரமான அடிப்படை வசதிகளை எவ்வித தாமதமுமின்றி அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்று எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தினார். புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தலைமை மருத்துவமனையிலேயே நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள அவல நிலை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


