தமிழ்நாடு

சென்னையில் திஷா குழுக் கூட்டம்: மத்திய அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்!

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா – DISHA) ஆய்வுக் கூட்டம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி, நகர்ப்புற வாழ்விட மேம்பாடு, குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை விரிவாக்கம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், நிலுவையில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மழைக்காலம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரமாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. வருங்கால நகர வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் புதிய பணிகளுக்கான திட்ட அறிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மக்களின் தேவைகளுக்கு எப்போதும் முதலிடம் அளித்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் பலன்களும் கடைக்கோடி மக்களை தடையின்றி முழுமையாக சென்றடைவதை அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன