புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை: நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாப்-அப் 2 பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி, 28/10/2026:
புதுச்சேரி அரசின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய கலந்தாய்வு குழுவான சென்டாக் (CENTAC), நடப்பு 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான மாப்-அப் 2-வது சுற்று (Mop up-2 Round) விருப்பப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் அல்லாத இளநிலை கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான மாப்-அப் 2-வது சுற்றுக்கு விருப்பம் தெரிவித்த மாணவர்களின் பட்டியல் மற்றும் தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கான (MSP) திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் சென்டாக் அதிகாரப்பூர்வ இணையதளமான www.centacpuducherry.in பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது முரண்பாடுகள் இருப்பின், மாணவர்கள் தங்களது பதிவு செய்த ‘Dashboard Login’ பக்கத்தில் உள்ள ‘Grievances Option’ வழியாக 29.10.2026 காலை 10.00 மணிக்குள் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களாக:
1. ஏற்கனவே கல்லூரிகளில் சேர்ந்து, மாப்-அப் 2-வது சுற்றுக்கு விருப்பம் தெரிவிக்காத மாணவர்கள், அவர்கள் தற்போது சேர்ந்திருக்கும் இடத்திலேயே தொடர்ந்து நீடிப்பார்கள்.
2. மாப்-அப் 2-வது சுற்றுக்கு தங்களது விருப்பத்தை முறைப்படி சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்தகட்ட இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படுவர்.
3. விருப்பப் பாடத் தேர்வுகள் (Course Preferences) காலியாக உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது.
மாணவர்களுக்கு இந்த விவரங்கள் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாணவர்கள் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது சென்டாக் உதவி எண்களான 0413-2655570, 2655571 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


