புதுச்சேரி

புதுச்சேரியில் மென்பொருள் கோளாறால் முடங்கிய ஆதார் சேவைகள்: பொது சேவை மையங்களில் மக்கள், மாணவர்கள் ஏமாற்றம்!

புதுச்சேரி, அக். 30: இந்தியாவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நலத்திட்டங்கள், வங்கிச் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாய ஆவணமாக உள்ளது. பொதுமக்கள் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவும், அரசின் பிரத்யேக மையங்கள் வாயிலாகவும் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளம் மூலம் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தங்கள் செய்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஆதார் விதிகளின்படி 5 வயது மற்றும் 15 வயதை எட்டும் சிறுவர், சிறுமியருக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் (விரல் ரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம்) செய்யப்பட வேண்டும். மேலும், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்தப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், UIDAI இணையதளத்தில் சர்வர் மற்றும் மென்பொருள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக மதியம் 3 மணி வரை பொதுமக்கள் காத்திருக்குமாறும், அதன் பின்னர் விண்ணப்பிக்கும் பணிகளைத் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாள் முழுவதும் நீடித்த மென்பொருள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளம் முழுமையாக இயங்காமல் முடங்கியது.

இதன் காரணமாக, புதுச்சேரி முழுவதும் உள்ள பொது சேவை மையங்களில் ஆதார் புதிய பதிவு, திருத்தங்கள் மற்றும் பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகள் அடியோடு முடங்கின. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மையங்களுக்கு வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன