புதுச்சேரி

உழவர்கரையில் ரூ.23.16 லட்சத்தில் சாலை, மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகள்: பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம்.எல்.ஏ நாராயணசாமி, எம்.பி செல்வகணபதி

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி நகர் மற்றும் திருவரங்கம் நகர் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் புதிய சாலை மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ், சிந்தாமணி நகர் பகுதியில் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டிலும், திருவரங்கம் நகர் பகுதியில் ரூ.7 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டிலும் மழைநீர் வடிகால் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதுடன், போக்குவரத்து வசதியும் மேம்படும். இப்பணிகளை உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி மற்றும் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வகணபதி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து முறைப்படி தொடங்கி வைத்தனர்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் இத்தகைய உட்கட்டமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பணிகளைத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன