குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஐஜி திருநாவுக்கரசு நேரில் பாராட்டு!

திருநெல்வேலி: போக்சோ, கொலை மற்றும் கூட்டுக் கொள்ளை வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வை நேர்த்தியாக மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்களை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ (POCSO) வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு மேற்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி வே. விஜயலட்சுமி மற்றும் இவ்வழக்கில் நீதிமன்றப் பணியை திறம்பட ஆற்றிய தலைமைக் காவலர் திருமதி ஜே. ஸ்டெல்லா மேரி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போக்சோ வழக்கில் தீவிர நீதிமன்றப் பணிகளை ஆற்றி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தந்த தலைமைக் காவலர் திருமதி இரா. அமுதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய கொலை வழக்கில் துரித நீதிமன்றப் பணிகளை மேற்கொண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தலைமைக் காவலர் திருமதி க. செல்வி அவர்களும் பாராட்டப்பட்டார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டுக் கொள்ளை வழக்கில் நுணுக்கமான சாட்சியங்கள் மற்றும் தடயங்களை சேகரித்து, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் திரு க. முருகன் ஆகியோரையும் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக தண்டனை பெற்றுத் தரும் காவல்துறையினரின் இத்தகைய அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகள் துறைக்குப் பெருமை சேர்ப்பதோடு, பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.