காரைக்கால்

காரைக்கால் முல்லை நகர் – கோல்டன் நகர் இடையே இணைப்புப் பாலம்: விசிக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அவசர மனு!

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் முல்லை நகர் தலித் குடியிருப்புப் பகுதியில் நிலவும் சுடுகாட்டு நெரிசல் மற்றும் சுகாதாரச் சீர்கேட்டிற்குத் தீர்வு காணும் வகையிலும், கோல்டன் நகர் பகுதியை இணைக்கும் புதிய பாலம் அமைத்துத் தரக்கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விரிவான கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசிக மாநிலத் துணைச் செயலாளர் சு. விடுதலைகனல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் முல்லை நகர் தலித் குடியிருப்பை ஒட்டியுள்ள சுடுகாட்டிற்கு நேரு நகர், வேட்டைக்காரன் தெரு, நித்தீஸ்வரன், தெற்குத் தெரு, வடக்குத் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட காரைக்காலின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இறுதிச் சடங்குகளுக்காக உடல்கள் எடுத்துவரப்படுகின்றன. இதனால் இறுதி ஊர்வலங்களின்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சுடுகாட்டுப் பகுதியிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்குக் கடுமையான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இறுதி ஊர்வலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மக்கள் பயன்படுத்தும் முல்லை நகர் – கோல்டன் நகர் பொதுப்பாதையைச் சிலர் தடுப்புச்சுவர் அமைத்து அடைத்துள்ளனர். தலித் மக்களின் நடமாட்ட உரிமையைப் பறிக்கும் நோக்கில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோதத் தடுப்புகள் இருப்பின் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இரு குடியிருப்புகளுக்கும் இடையில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்காலின் குறுக்கே மக்கள் பாதுகாப்பாகச் சென்று வர புதிய இணைப்புப் பாலம் அமைத்துத் தர வேண்டும். பொதுப்பாதை நில வகைப்பாட்டை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அத்துடன் சுடுகாட்டின் சுகாதார நிலையை உள்ளாட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்குச் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் 7 நாட்களுக்குள் முல்லை நகரில் கூட்டுக் கள ஆய்வு மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வெளியிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனுவின் நகல்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ந. ரங்கசாமி மற்றும் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன