புதுச்சேரி அரசு எல்.டி.சி-க்களுக்கு யு.டி.சி பதவி உயர்வு: விவரங்களை அனுப்ப தீவிர உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி அரசுத் துறைகளில் பணியாற்றும் கீழ்நிலை எழுத்தர்களுக்கு (LDC), மேல்நிலை எழுத்தர் (UDC) பதவி உயர்வு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (DP&AR – Personnel Wing) சார்பில் வெளியிடப்பட்டுள்ள மிக அவசர அதிகாரப்பூர்வ குறிப்பாணையில், அரசுப் பணிகளில் கீழ்நிலை எழுத்தர்களாகப் பணிபுரிந்து, வரும் 01.01.2026 அன்றைய நிலவரப்படி 8 ஆண்டுகள் வழக்கமான சேவையை முழுமையாக நிறைவு செய்த பணியாளர்கள் மட்டுமே இந்த மேல்நிலை எழுத்தர் பதவி உயர்வுப் பரிசீலனைக்குத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய பணியாளர்களின் பணி விவரங்கள், நன்னடத்தைச் சான்றிதழ் (Integrity Certificate), துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்று (No Disciplinary Proceedings Certificate) மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான (2020 முதல் 2025 வரை) ஆண்டறிக்கைக் குறிப்புகள் (APARs) ஆகியவற்றைச் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டியல் இன (SC) பணியாளர்களுக்கு அண்மையில் பெறப்பட்ட புதிய சாதிச் சான்றிதழும், மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு (PwBD) மருத்துவ வாரியத்தின் ஊனமுற்றோர் சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய ஆவணங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தையும் வரும் நவம்பர் 6, 2026-க்குள் பணியாளர் நிர்வாகத் துறைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைய ஊழியர்கள் தங்களது துறைத் தலைவர்களைத் தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்கள் காலதாமதமின்றி அனுப்பப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
