சேதமடைந்த செல்லிப்பட்டு படுகை அணையை சீரமைக்கக் கோரி பாமக போராட்டம்: வில்லியனூரில் தீவிர ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சேதமடைந்து கிடக்கும் செல்லிப்பட்டு படுகை அணையை உடனடியாக சீரமைத்து தடுப்பணையாக கட்டித்தர வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், செல்லிப்பட்டு மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதிகளுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு படுகை அணை அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த அதீத கனமழை மற்றும் வீடூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதன் காரணமாக ஆற்றில் வரும் தண்ணீர் தேங்காமல், தொடர்ந்து வீணாகக் கடலில் சென்று கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேதமடைந்த அணையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், அதனை முறையான தடுப்பணையாகக் கட்டித்தர புதுச்சேரி அரசை வலியுறுத்தி விரிவான மக்கள் திரள் போராட்டம் நடத்துவது தொடர்பாக வில்லியனூர் பகுதியில் உள்ள புதுச்சேரி பாமக இணை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கோ. மதியழகன் தலைமை தாங்கி, போராட்டத்தின் வடிவங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில வன்னியர் சங்கத் தலைவர் வடிவேல் கவுண்டர், பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசகர் கோபி (எ) கோபாலகிருஷ்ணன், திண்டிவனம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மொ.ப. சங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில, தொகுதி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு உடனடியாகப் படுகை அணை சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
English summary: The Pattali Makkal Katchi (PMK) held a consultation meeting at its Villianur office in Puducherry about launching a large protest demanding repair of the damaged Sellipattu bed dam across the Sankarabarani river and its reconstruction as a check dam. According to the report, most of the dam was broken in the heavy rain and flooding of November 2021, and river water now flows to the sea, affecting groundwater and farming. The meeting was chaired by state organiser Ko. Mathiyazhagan, and urged the government to start the repairs immediately.
