தமிழ்நாடு

சுங்கான்கடை நெடுஞ்சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு தேவை: தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அவதி!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் முதல் தோட்டியோடு வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு உடனடி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக பார்வதிபுரம் – தோட்டியோடு சாலை உள்ளது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள இந்தச் சாலை தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை, குளச்சல், கருங்கல், புதுக்கடை, தக்கலை, மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான இணைப்புச் சாலையாக இது உள்ளதால், எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனிடையே, சமீபத்தில் பெய்த பருவமழையின் காரணமாக சாலையின் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக களியங்காடு மற்றும் சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவுகளை மீறி உணவகங்களுக்கு வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சுங்கான்கடை பேருந்து நிறுத்தம் அருகிலேயே வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், வழித்தடப் பேருந்துகள் சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டிய அவலநிலை உருவாகி தொடர் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த சூழலில், நேற்று மாலையும் இந்த பகுதியில் அதிவேகமாக வந்த காரும் அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டதில் கார் பலத்த சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். விபத்துகளைக் குறைக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.

எனவே, விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு பார்வதிபுரம், களியங்காடு முதல் சுங்கான்கடை, தோட்டியோடு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் எனவும், பழுதடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன