புதுச்சேரி

புதுச்சேரியில் தொடர் மின்தடை: மின் துறை தலைமை அலுவலகத்தை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் முற்றுகை!

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதைக் கண்டித்து, உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜி.நேரு தலைமையில் பொதுமக்கள் நேற்று உப்பளத்தில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, சோனாம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (வாட்டர் டேங்க்) அருகிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட போராட்டக்காரர்கள், உப்பளம் மின் துறை தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அங்கு மின் துறை தலைமை அலுவலக வாயிலை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து, ஒதியஞ்சாலை காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஜெயகுருநாதன் போராட்டக்காரர்கள் மற்றும் எம்எல்ஏ நேருவிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது எம்எல்ஏ நேரு மின் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் தெரிவிக்கையில், “புதுச்சேரி நகர்ப் பகுதியின் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் உள்ள பழைய உள்கட்டமைப்புகளை உடனடியாக நவீனமயமாக்க வேண்டும். போதிய மின்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, முன்னறிவிப்பின்றி நிகழும் மின்தடைக்கு அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து மின் துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இனி வரும் நாட்களில் மின்தடை ஏற்படாதவாறு தங்களால் இயன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

English summary: Urulaiyanpet MLA G. Nehru led residents in besieging the electricity department head office at Uppalam in protest against frequent unannounced power cuts. Nehru urged officials to modernise the old infrastructure at the Venkata Nagar substation and find a permanent solution. After talks with Odiansalai Sub-Inspector Jayagurunathan and electricity officials, who promised precautionary measures, the protesters dispersed peacefully.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன