திருமண நாள்: குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி – சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

திருப்பதி, ஆக. 28: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் தங்களது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தங்களது திருமண நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று நேர்த்திக்கடன் மற்றும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டும் தங்களது திருமண நாளையொட்டி, குடும்பத்தினருடன் திருப்பதி திருமலைக்கு வருகை தந்து ஏழுமலையானை நேரில் தரிசித்து வழிபாடு நடத்தினர். சாமி தரிசனம் செய்த அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து சௌமியா அன்புமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இன்று எங்கள் திருமண நாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படம்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். இந்தத் தகவலையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தம்பதியருக்குத் தங்களது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
