புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் முன்னோர்களை மலர்களால் அலங்கரித்து நினைவுகூர்ந்தனர்
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரியில் கல்லறை திருநாளை முன்னிட்டு உப்பளம், அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளை கிறிஸ்தவர்கள் மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி முன்னோர்களை மனமுறுகி வழிபட்டனர்.
கல்லறை திருநாள் ஆன்மாக்கள் தினமாக கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இறந்த தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அன்புடன் நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவனிடம் ஜெபம் செய்யும் நாளாகும். அந்த வகையில் புதுச்சேரி உப்பளம், அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து புல் மற்றும் செடிகளை அகற்றி வண்ணம் தீட்டி சீரமைத்தனர். தொடர்ந்து வெள்ளை ரோஜா, சாமந்தி, டோரியா, ப்ளூ டேசி மற்றும் லில்லி பூக்கள், நித்திய கல்யாணி போன்ற பல்வேறு வகையான மலர்களால் கல்லறைகளை அலங்கரித்து கல்லறைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டு இறந்த முன்னோர்களை நினைத்து வழிபட்டுச் சென்றனர். இதே போன்று தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகளும் நடைபெற்றன.
English summary: On All Souls’ Day, observed by Christians on November 2, Christians in Puducherry areas including Uppalam, Ariyankuppam, Nellithope and Reddiarpalayam cleaned, painted and decorated the graves of their departed relatives with flowers, lit candles and offered special prayers. Special masses and prayer services were also held in churches.