வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் படிவம்-6 சமர்ப்பிக்க தயங்க வேண்டாம்: தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம்!
புது டெல்லி/புதுச்சேரி: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க அச்சமின்றி படிவம்-6 சமர்ப்பிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) கீழ் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ, அத்தகைய வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க புதிய விண்ணப்பதாரர்களுக்கான ‘படிவம்-6’ விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க தயங்குவதாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குப் புகார்கள் வந்தன. படிவம்-6ல் ‘முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கிறேன்’ என்ற உறுதிமொழி இடம்பெற்றிருப்பதால், ஏற்கனவே வாக்காளராக இருந்தவர்கள் இதை நிரப்பினால் தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31-ன் கீழ் நடவடிக்கை பாயுமோ எனப் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இந்த விவகாரம் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வாக்காளர்கள் மத்தியில் நிலவும் இந்த சட்டரீதியான அச்சம் முற்றிலும் தேவையற்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள், தாங்கள் ஏற்கனவே வாக்காளராகப் பதிவு செய்திருந்தாலும், இறுதி வாக்காளர் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்காக எவ்விதத் தயக்கமும் இன்றி படிவம்-6 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இந்த நடவடிக்கையானது வேண்டுமென்றே தவறான தகவல் அளித்த குற்றமாக எந்தக் காரணத்தைக் கொண்டும் கருதப்படாது எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.
English summary: The Election Commission of India has clarified that voters whose names are missing from the draft electoral roll under the Special Intensive Revision (SIR) can submit Form-6 without fear. Complaints had said voters hesitated because the form carries a declaration of applying for the first time, and they feared action under Section 31 of the Representation of the People Act, 1950. The Commission sent a circular to the chief electoral officers of all states and Union Territories saying this fear is unnecessary and that such an application will not be treated as deliberately giving false information.
