கோவை மத்திய சிறையிலிருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம்: சிறை பாதுகாப்பை வலுப்படுத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை:
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பி ஓடிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இராகவன் என்ற கைதி, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்டார். அப்போது சிறை வளாகத்தில் இருந்து அவர் திடீரென தப்பி ஓடியுள்ளார். அன்னூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதே தப்பி ஓட முயன்ற அவரை, போலீசார் துரத்திப் பிடித்து தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை கோவை சிறை வளாகத்தில் கூடுதல் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் கையாண்டிருக்க வேண்டும். ஆனால், சிறைக் காவலர்களின் அலட்சியப் போக்கே அவர் மீண்டும் தப்பி ஓட காரணமாக அமைந்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது நிர்வாக சீர்குலைவையே காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து கடந்த வாரம் இரு கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது கோவை மத்திய சிறையிலும் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி இராகவனை தனிப்படை அமைத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிறைகளிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.


