புதுச்சேரியில் மாவட்ட அளவிலான ஆதார் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் குளோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கன் தலைமையில் மாவட்ட அளவிலான ஆதார் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஐந்து முதல் 15 வயதுடையவர்களுக்கான ஆதார் பதிவின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல், ஆதார் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவை அதிகரித்தல், ஆதார் சேவை மையங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த தகவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆதார் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்த்தல் ஆகியன குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்களுக்கு தடையற்ற ஆதார் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.


