நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக கார்த்திகா போட்டியிட்டார். இந்நிலையில், தேர்தல் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பாக கார்த்திகா, அவரது கணவர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கோவையில் இன்று அதிகாலை வேளையில் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள். ஜனநாயக முறைப்படி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ததற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது முற்றிலும் தேவையற்ற செயலாகும்.
அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது இத்தகைய அடக்குமுறைகளை ஏவுவதை ஏற்க முடியாது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவையும், அவருடன் கைதான மற்ற கட்சி நிர்வாகிகளையும் காவல்துறை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
English summary: PMK president Anbumani Ramadoss condemned the arrest of Naam Tamilar Katchi candidate Karthika and six others, including her husband and party functionaries, by police in Coimbatore in a case registered during the Dharapuram by-election. In a statement he said the early-morning arrests were unwarranted, noting that the earlier cases arose from protests the candidate held alleging obstruction of her campaign, and demanded their unconditional release.


