புதுச்சேரி பெரிய மார்க்கெட் கால்வாய் பகுதியில் கழிவுநீர் பிரச்சனை: அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு!
புதுச்சேரி, அக். 27:
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரானது சின்னசுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதி மற்றும் காந்தி வீதியில் உள்ள யூ-வடிவ வாய்க்கால் வழியாக வெளியேறி, சின்ன வாய்க்கால் மூலம் கடலில் கலக்கிறது.
இந்நிலையில், பெரிய மார்க்கெட் பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீரும் இதே வாய்க்கால் வழியாகச் செல்கிறது. அங்குள்ள மீன் கழிவுகள் மற்றும் பிற கழிவுநீரும் மழைநீருடன் கலப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு, உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆதாஷ் மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண்அய்யாவு உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று வாய்க்கால் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரிய மார்க்கெட் மீன் கழிவுகள் மற்றும் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்த பின்னரே மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இக்கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கலந்தாலோசித்து, வடிகால் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த ஆய்வின் போது நகராட்சி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
