கோரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. தர்ணா: புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி, அக். 27: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.விடம் தொடர் புகார்களைத் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், கோரிமேடு காவல் நிலைய போலீசாரிடம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
இந்த சூழலில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வினோபா நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செயின்பால் பேட் பகுதியிலும் மற்றொரு நபர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இத்தகவலை அறிந்த எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், தனது ஆதரவாளர்களுடன் இரவு 9:30 மணியளவில் கோரிமேடு காவல் நிலையத்திற்கு விரைந்தார். அங்கு தொடர் தாக்குதல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, காவல் நிலைய வாசலிலேயே தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) வம்சிதரெட்டி, ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்துடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.
