காரைக்காலில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா
காரைக்கால், நவம்பர் 1: காரைக்காலில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா அம்மையார் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
சங்க தலைவர் சிவகுமார், பொதுச்செயலாளர் ராஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், சிறந்த பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் சாதனை மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற 58 மாணவர்கள், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சிக்கு பங்களித்த 190 ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பள்ளி தூய்மைக்கான தேசிய விருது பெற்ற பள்ளிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் மாணவர்களின் வளர்ச்சியும் எதிர்காலமும் ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்றும், விளையாட்டு மாணவர்களிடம் ஒழுக்கம், நேரம் தவறாமை உள்ளிட்ட பண்புகளை வளர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் மீனாட்சி சுந்தரம், டாக்டர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
