சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க புதிய குழு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அடங்கிய புதிய நிர்வாகக் கண்காணிப்புக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது தீட்சிதர்கள் வசம் உள்ள இக்கோயிலின் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், கோயில் நிர்வாகக் கண்காணிப்புக் குழுவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுரேஷ்குமார் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சி. ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நிர்வாகக் குழுவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசுத் துறை அதிகாரிகள் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பில் பொது தீட்சிதர்களின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், கோயிலின் உண்மையான வருமானம் மற்றும் முறையான கணக்கு வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக தீட்சிதர்கள் முறையாகத் தரவில்லை என்பதையும் உறுதிபட சுட்டிக்காட்டினர். மேலும், சிதம்பரம் கோயிலின் கனகசபையில் நின்று பக்தர்கள் அனைவரும் பாரபட்சமின்றி தரிசனம் செய்வதையும், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதற்கான சம வாய்ப்பு வழங்கப்படுவதையும் இக்குழு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், நிதி தணிக்கை மற்றும் பக்தர்கள் உரிமை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு பக்தர்கள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
English summary: The Madras High Court has set up a new supervisory committee to monitor the administration of the Chidambaram Nataraja Temple in Cuddalore district. A bench of Justices Jayachandran and Manoharan named retired High Court judges Bharathidasan and Sureshkumar and retired IAS officer C. Rajendran to the committee, and directed government departments to assist it. According to the report, the court noted that the Podhu Dikshitars, who run the temple, had not furnished proper accounts for 12 years, and asked the committee to ensure all devotees can worship on the Kanaka Sabha and that Thevaram and Thiruvasagam are sung with equal opportunity.

