புதுச்சேரி

புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிகள் போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி, அக்டோபர் 30: தமிழகத்தை விட புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கக் கோரி வரும் 31ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ (எம்எல்) கட்சியினர் கூட்டாக ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மற்றும் தலைவர்கள், புதுச்சேரியில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மூன்று மாதங்களில் மட்டும் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர். தீபாவளி நெருங்கும் சூழலில் இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ரேஷனில் அரிசி வழங்காமல் நேரடி பணப் பரிமாற்ற முறையைக் கொண்டுவருவதால் அரிசி பதுக்கல் அதிகரித்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், இது செயற்கையான விலை ஏற்றம் எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். சர்க்கரையின் விலை தமிழகத்தில் 55 ரூபாய் முதல் 65 ரூபாயாக உள்ள நிலையில், புதுவையில் 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் காய்கறி விலையும் உயர்ந்துள்ளதால் புதுச்சேரி அரசு உடனடியாகத் தலையிட்டு வியாபாரிகளிடம் பேசி விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பதுக்கலைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கக் கோரி, வரும் 31ஆம் தேதி குடிமைப் பொருள் வழங்கல் துறை முன்பு பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன், சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், பெருமாள், சிபிஐ பாலசுப்பிரமணியன், விஜயா, ஏஐடியுசி அந்தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன