கீழாசெம்பியங்கல் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி: முதல்வர் ரங்கசாமியிடம் காசோலையைப் பெற்றார் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட கீழாசெம்பியங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிகளை விரைந்து முடிப்பதற்காக, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15 லட்சம் நிதி உதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாண்புமிகு முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் ரூ.15,00,000 (ரூபாய் பதினைந்து லட்சம்) மதிப்பிலான நிதிக்கான காசோலையை அதிகாரப்பூர்வமாக வழங்கினார். இக்காசோலையினை நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் V. விக்னேஸ்வரன் (MBBS) முதலமைச்சரிடமிருந்து நேரில் பெற்றுக்கொண்டார்.
பழமை வாய்ந்த கீழாசெம்பியங்கல் கிராமத்து அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி கிராம பொதுமக்களும் பக்தர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையினை அரசுக்கு முறைப்படி கொண்டு சென்று இந்து சமய அறநிலையத்துறை மூலம் உரிய நிதி ஒதுக்கீடு செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தார்.
தற்போது அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த 15 லட்சம் ரூபாய் நிதியுதவியானது ஆலயத்தின் உள்கட்டமைப்பு மற்றும் திருப்பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு பேருதவியாக அமையும். இதன் மூலம் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, கிராமப்புற மக்களின் வழிபாட்டிற்கும் ஆன்மிக மேம்பாட்டிற்கும் பெரும் பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் திருப்பணிக்கு உடனடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு தொகுதி பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.



