வங்கி விவரங்கள், ஓடிபி எண்களை யாருடனும் பகிராதீர்கள்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
புதுச்சேரி, அக்.22: பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரகசிய கடவுச்சொற்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், ஆன்லைன் மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் முழுமையான நிதிச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் வங்கியின் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து நடத்திய ‘அனைத்துத் தரப்பினருக்கும் நிதிச் சேவை இயக்கம்’ தொடக்க விழா வில்லியனூரில் நடைபெற்றது.
இவ்விழாவினை அமைச்சர் நமச்சிவாயம் முறைப்படி தொடங்கி வைத்துப் பேசினார். இந்நிகழ்வில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் குமரன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் முன்னோடி மாவட்ட மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் உரையாற்றிய அமைச்சர் நமச்சிவாயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் வங்கிகள் ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டினார். ஜீரோ பேலன்ஸ் ‘ஜன் தன்’ திட்டத்தின் மூலம் விளிம்புநிலை மக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் பெற்று, அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சிறு வணிகர்கள் பயனடையும் முத்ரா கடன் திட்டம் மற்றும் ஆண்டிற்கு வெறும் ரூ.436 பிரீமியத்தில் கிடைக்கும் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகளைத் தவிர்க்கவே வங்கிகள் ஓடிபி முறையை அமல்படுத்தியுள்ளன என்றும், பொதுமக்கள் ஒருபோதும் தங்களது வங்கி விவரங்கள், ஓடிபி மற்றும் பாஸ்வேர்டுகளை மற்றவர்களிடம் பகிரக் கூடாது என்றும் எச்சரித்தார். மேலும் எதிர்காலச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க வங்கிக் கணக்குகள் மற்றும் டெபாசிட்களுக்கு தவறாமல் வாரிசுதாரர்களை (நாமினி) நியமிக்க வேண்டும் என்றும், வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.


