வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புதிய குளம் அமைக்கப்படும் – எம்எல்ஏ ரவிக்குமார் உறுதி
புதுச்சேரி, அக்டோபர் 25: வில்லியனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தனியாக குளம் அமைக்க வேண்டும் என்ற சுமார் 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
வில்லியனூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு என்று தனியாக குளம் இல்லாததால், அப்பகுதி மக்களும் பக்தர்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு எம்எல்ஏ ரவிக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவிலின் சிறப்பு அதிகாரி வெங்கடேசன் முன்னிலை வகித்ததுடன், கோவில் நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ரவிக்குமார், கோவிலுக்கு அருகில் சுமார் 21,000 சதுர அடி பரப்பளவில் இடம் உள்ளதாகவும், அங்கு குளம் அமைப்பதுடன் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, திருமண நிகழ்ச்சிகளுக்கான வசதிகள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்திற்குத் தேவையான நிதியை பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியான சிஎஸ்ஆர் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.