உருளையார்பேட்டை தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் ஆய்வு
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி உருளையார்பேட்டை தொகுதியில் கனமழை காரணமாக தேங்கிய மழைநீரை அகற்ற சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி மற்றும் நகராட்சி ஆணையர் அருண் ஐயாவு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக உருளையார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ரங்கப்பிள்ளை வீதி, வெல்லாள முதலியார் வீதி, தம்புநாயக்கர் வீதி, லூயி பிரகாசம் வீதி மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சரியான முறையில் வெளியேறாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய உருளையார்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழகத்தின் தலைவருமான நேரு என்கின்ற குப்புசாமி எம்எல்ஏ அவர்கள் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் ஐயாவு அவர்களுடன் இணைந்து மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
சின்ன சுப்பராய பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதியில் உள்ள இருபுற யூ வடிவ வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தினால் இதற்கு தீர்வு காணப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. சின்ன சுப்பராய பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதியின் இருபுற வாய்க்காலை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது புதுச்சேரி நகராட்சியின் செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் நேயம் மக்கள் கழகத்தின் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

