தமிழ்நாடு

கல்லூரி நூலகங்களுக்கு மேலும் 10,000 நூல்கள்: இதுவரை 7.10 லட்சம் புத்தகங்களை வழங்கி மு.க. ஸ்டாலின் சாதனை!

சென்னை, நவ. 5: தன்னை நேரில் சந்திப்பவர்கள் அன்பளிப்பாக வழங்கும் புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் பகுதி நூலகங்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று (05.11.2026) காலை பல்வேறு நூலகங்களின் பயன்பாட்டிற்காக மேலும் 10,000 புத்தகங்களை அவர் நேரில் வழங்கினார்.

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், தங்களது கல்லூரி மற்றும் பகுதி நூலகங்களுக்குப் புத்தகங்களை வழங்கிட விடுத்த கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் பயிற்சி மைய நூலக நிர்வாகிகளிடம் நூல்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

இதில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்களும், வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்வி மண்டபத்தில் இயங்கும் மதிப்புக்கூட்டு வரி (VAT) பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்களும் வழங்கப்பட்டன. மேலும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 புத்தகங்கள் என மொத்தம் பத்தாயிரம் நூல்கள் இன்று வழங்கப்பட்டன.

தன்னைச் சந்திக்கும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சால்வைகள் மற்றும் மாலைகளுக்குப் பதிலாக புத்தகங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவ்வாறு அன்பளிப்பாகப் பெறப்படும் புத்தகங்களை முறையாக வகைப்படுத்தி, கிராமப்புற நூலகங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறார்.

இன்றைய புத்தக வழங்கள் மூலமாக, இதுவரை பல்வேறு கல்லூரிகள், மாவட்ட மற்றும் கிளை நூலகங்களுக்கு மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ள புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரமாக (7,10,000) உயர்ந்துள்ளது. இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை முன்னெடுக்கும் அவரது இந்த ஆக்கப்பூர்வமான முயற்சி சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது.

English summary: DMK president M.K. Stalin handed over a further 10,000 books to libraries on 5 November 2026, at the party headquarters at Anna Arivalayam in Chennai, according to the report. The books went as 5,000 for St. Xavier’s (Autonomous) College library in Palayamkottai, 3,000 for a VAT training centre in Vasudevanallur, and 2,000 for the Government Arts College library in Chengam. The report says the total number of books he has given so far has reached 7,10,000.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன