புதுச்சேரி கைவினைஞர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம்: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ ரவிகுமார் தலைமையில் கோரிக்கை மனு!

புதுச்சேரி: புதுச்சேரி புதுமை கைவினைஞர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி, வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ரவிகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ந.ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரியில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் ‘புதுமை கைவினைஞர்கள் கூட்டுறவு சங்கம்’ சிறப்பாக இயங்கி வருகிறது. சுமார் 400 உறுப்பினர்களையும், 5,000-க்கும் மேற்பட்ட கைவினைத் தொழிலாளர்களையும் கொண்டு இயங்கும் இந்த சங்கம், பாரம்பரிய கலைப் பொருட்களை உருவாக்குவதிலும், உள்ளூர் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சங்கத்திற்கு நிரந்தர மற்றும் இடவசதியுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ரவிகுமார் தலைமையில், தேசிய விருது பெற்ற கைவினைஞர் மற்றும் சங்கத் தலைவருமான சேகர், முதலமைச்சர் ந.ரங்கசாமியை சட்டமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது கைவினைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கட்டட வசதியை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தி விரிவான மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, கைவினைஞர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, உரிய ஆவணப் பணிகளை மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது சங்கத்தின் துணைத் தலைவர் புவனேஸ்வரி, செயலாளர் ரமேஷ், இயக்குநர் கலைமாமணி சண்முகம், புதுமை மேலாளர் திருமுருகன் மற்றும் கைவினை கலைஞர்கள் உடனிருந்தனர். கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சருக்கு வில்லியனூர் தொகுதி மக்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.



