கட்டுமான தொழிலாளர்களுக்கு விழாக்கால உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விழாக்கால உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் தட்டாஞ்சவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவை கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் தட்டாஞ்சவடி கட்டுமான நிலவாரி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில நிர்வாகி மணிபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் தினேஷ் குமார், பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விழாக்கால உதவித்தொகையாக 8000 ரூபாய் வழங்கிட வேண்டும் என்றும், திருமண உதவித்தொகை 30,000 ரூபாயாகவும், மகப்பேறு உதவித்தொகை 20,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இயற்கை மரண உதவித்தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், நலவாரிய குழுவை உடனடியாக அமைத்திட வேண்டும் மற்றும் தகுதியுள்ள கட்டுமான தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராமசாமி, கொளஞ்சியப்பன், மதிவானன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.