புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று கைதிகள் மீது வழக்கு
புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் செல்போன் மற்றும் சார்ஜர்களை பதுக்கி வைத்திருந்த விசாரணை கைதிகள் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 1200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான வார்டன்கள் சிறையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதிகள் வளாகம் உள்சுவருக்கும் வெளி காம்பவுண்ட் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு செல்போன் மற்றும் நான்கு சார்ஜர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கார்த்திகேயன், சூர்யா, அப்துல் நசீர் ஆகிய விசாரணை கைதிகள் செல்போன் மற்றும் சார்ஜர்களை பதுக்கியது தெரிய வந்தது. மேலும் ரவுடிகளான இவர்களது கூட்டாளிகள் வெளியிலிருந்து ஜெயிலுக்குள் செல்போன் மற்றும் சார்ஜர்களை வீசியதும் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதிகள் கார்த்திகேயன் உட்பட மூன்று பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
