புதுச்சேரி ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பரிசு: தலா ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிகளுக்குப் பதிலாக தலா ரூ.1,000 ரொக்கமாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைக்கு பதிலாக, இந்த ஆண்டு பயனாளிகளுக்கு நேரடியாக பணமாக ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
இதன்படி, புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் உள்ள 47,180 குடும்ப பங்கீட்டு அட்டைகளில் (Ration Cards) இடம்பெற்றுள்ள 1,33,890 பயனாளிகள் பயனடையவுள்ளனர். இவர்களில் 60,877 ஆண்கள் மற்றும் 73,013 பெண்கள் அடங்குவர். இதற்காக மொத்தமாக ரூ.13 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
பிராந்திய வாரியான புள்ளிவிவரங்களின்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் 35,440 குடும்ப அட்டைகளைச் சேர்ந்த 1,03,423 பயனாளிகளுக்கு ரூ.10,34,23,000 தொகையும், காரைக்கால் பிராந்தியத்தில் 9,712 குடும்ப அட்டைகளைச் சேர்ந்த 25,525 பயனாளிகளுக்கு ரூ.2,55,25,000 தொகையும் வழங்கப்படுகிறது. அதேபோன்று ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 2,028 குடும்ப அட்டைகளைச் சேர்ந்த 4,942 பயனாளிகளுக்கு ரூ.49,42,000 தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
