புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தத் தடை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

புதுச்சேரி, அக். 26: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளிக் கல்வித் துறையால் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்படும் நாட்களில், பள்ளிகளில் எந்தவிதமான வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்ககம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளிக் கல்வி இயக்குநர் டி.மோகன்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் அதிகாரப்பூர்வமாக விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் தினங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமைகள் எந்தவிதமான வகுப்புகளையும் நடத்தக் கூடாது. அதேபோன்று, விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகளைப் பள்ளிச் சீருடையிலோ அல்லது வண்ண ஆடைகளிலோ பள்ளிக்கு வரவழைக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ கூடாது.
இந்த அறிவுறுத்தல்களை மீறி செயல்படுவது தீவிரமாகக் கருதப்படும். அவ்வாறு விதிகளை மீறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளித் தலைமைகளும் இந்த உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைகள் மற்றும் தீவிர வானிலை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படும் காலங்களில், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்கள் அழைக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த அதிரடி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.



