புதுச்சேரி

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுக்கு சொந்த செலவில் விரிப்புகள் வழங்கிய எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகளுக்கு, தனது சொந்த செலவிலேயே புதிய படுக்கை விரிப்புகளை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் களப்பணியில் இறங்கியுள்ளார்.

முன்னதாக புதுச்சேரி தலைமை அரசு பொது மருத்துவமனையில் (GH) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது உள்நோயாளிகள் பிரிவில் உள்ள வார்டுகளில் படுக்கை விரிப்புகள் போதிய அளவில் இல்லாததும், இருக்கும் விரிப்புகள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத நிலையும் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

எனினும், அரசு தரப்பிலிருந்து படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவதில் காலதாமதம் நிலவி வந்தது. இந்நிலையில், அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நோயாளிகளை காக்க வைக்காமல், உடனடியாக களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன், இன்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள அனைத்துப் படுக்கைகளுக்கும் தேவையான புதிய விரிப்புகளைத் தனது சொந்த நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கினார்.

குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து உடனடித் தீர்வை முன்னெடுப்பதே மக்கள் பிரதிநிதியின் கடமை என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்து தேவைகளையும் கேட்டறிந்தார்.

ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக பெரிதும் நம்பியிருக்கும் அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில் சொந்த செலவில் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்ட செயல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

English summary: MLA Vignesh Kannan bought new bed sheets for all beds at the Puducherry Government General Hospital with his own funds. During an earlier inspection he had found that the inpatient wards did not have enough usable sheets, and the matter was raised with the hospital administration and the government, but supply was delayed. He revisited the hospital, handed over the new sheets and spoke to patients about their needs. Patients and residents welcomed the step.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன