தேசியம்

புதுவையில் முதலீட்டு ஆசை காட்டி வழக்கறிஞர் மனைவியிடம் ரூ.80 லட்சம் மோசடி: தலைமறைவான தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு!

புதுச்சேரி, நவ. 1:

புதுச்சேரியில் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, வழக்கறிஞரின் மனைவியிடம் சுமார் ரூ.80 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதியை கோரிமேடு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புதுவை தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கிறிஸ்ட் ஆனந்த் (44) மற்றும் அவரது மனைவி அனிதா (43) ஆகிய இருவரும் நேரு வீதியில் டிரேடிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். தங்களது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் தினமும் மற்றும் மாதந்தோறும் அதிக வட்டி மற்றும் லாபம் கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திலகர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தன கிருஷ்ணனின் மனைவி விஜயமேரி (47) என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை அணுகியுள்ளார்.

அப்போது விஜயமேரியிடம் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி பல தவணைகளில் ரூ.30 லட்சத்தைப் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் கூறியபடி லாபத் தொகை வழங்கப்பட்டதால் அதனை நம்பி கூடுதல் முதலீடுகளைச் செய்துள்ளார். பின்னர் நிறுவனம் பிரைவேட் லிமிடெட்டாக மாற்றப்பட்டுள்ளதாகவும், முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற மேலும் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி கூடுதல் தொகையையும் பெற்றுள்ளனர். அத்துடன் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி 7.5 சவரன் நகைகளையும் பெற்றுக்கொண்டு, மொத்தம் ரூ.79.50 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாகியும் பணத்தையோ லாபத்தையோ தராமல் இழுத்தடித்து வந்த அந்த தம்பதியினர், திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு தங்களது வீடுகளையும் விற்றுவிட்டு தலைமறைவாகினர். இதனால் ஏமாற்றமடைந்த விஜயமேரி அளித்த புகாரின்பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தம்பதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

English summary: Korimedu police in Puducherry are searching for a couple who allegedly cheated a lawyer’s wife of about Rs 80 lakh in cash and gold jewellery. According to her complaint, the couple ran a trading firm on Nehru Street and promised high returns; she approached it in 2022 and paid Rs 30 lakh in instalments, and was then allegedly asked for more money and 7.5 sovereigns of jewellery to get her investment back, with the total put at Rs 79.50 lakh. The couple reportedly then closed the office, sold their houses and went into hiding, and police have registered a case.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன